பிறவிக் குறைபாட்டினாலோ, நோயினாலோ, அல்லது விபத்தினாலோ ஒருவரது செயல் சுதந்திரம் பாதிக்கப்படும்பொழுது, அந்த பாதிப்புகளை ஆராய்ந்து, தகுந்த சிகிச்சையின் மூலம் இழந்த செயல்சுதந்திரத்தை மீட்டெடுப்பதோ, அது இயலாத பட்சத்தில், அந்த இழப்புகளுடன் அந்நபரை சுதந்திரமாக வாழப் பழக்கப்படுத்துவதோ செயல்முறை மருத்துவம் ஆகும். செயல்முறை மருத்துவர்கள் பல்வேறு சிகிச்சை முறைகளை (மருந்து மாத்திரைகள் தவிர்த்து) பயன்படுத்தி அவர்களது சிகிச்சையின்
நோக்கத்தை அடைவர்.
இந்த சிகிச்சையின் முக்கிய நோக்கம் ஒவ்வொரு நபரும் அன்றாட செயல்களில் (சுய-பராமரிப்பு, கல்வி, வேலை, விளையாட்டு, மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த அனைத்து செயல்கள்) சுதந்திரமாக (பிறர் உதவியின்றி) செயல்பட வேண்டும் என்பதாகும். செயல்முறை மருத்துவர்கள் இந்த நோக்கத்தை ‘நோய் (அ) குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவருடனும், அவர் சார்ந்தவர்களுடனும், மற்றும் அவரின் சுற்றுப்புறத்தினுடனும் பணியாற்றுவதன் மூலம் எய்துவர்.